TamilsGuide

எம். ஜி. ஆர். படம் என்றாலே, நம்பியார் உண்டா இல்லையா....

எம். ஜி. ஆர். படம் என்றாலே, நம்பியார் உண்டா இல்லையா என்று ரசிகன் தேடுவான், இருக்கையில் நெளிவான், நம்பியாரை மனதாரச் சபித்தபடி காத்திருப்பான். அவரது அட்டகாசங்களை மிகுந்த பொறுமையோடு ரசித்திருப்பான். கிளைமாக்ஸ் காட்சியில் அவருக்குக் கிடைக்க வேண்டியதை எம்.ஜி.ஆர் வந்து வழங்கும் நேரத்தில், தன்னை மறந்து எழுந்து நின்று விசில் அடித்துக் கூத்தாடுவான்.
எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் அவர் அப்பாவி எம். ஜி. ஆரைச் சவுக்கால் வெளுத்து எடுக்கும்போது துடித்துப் போகும் ரசிகர்கள், எந்த நம்பிக்கையில் சகித்துக்கொண்டு காத்திருந்தார்கள்! பிற்பகுதியில் இரட்டைப் பிறவியில் அடுத்த உருவில் வீரநாயகனாக வந்து அதே எம். ஜி. ஆர். அதே சவுக்கைச் சாதுரியமாகக் கைமாற்றிப் பற்றிக்கொண்டு நம்பியாரைப் பழிக்குப் பழி வாங்குவார் என்ற நம்பிக்கையில்தான்!
‘நான் ஆணையிட்டால்..’ என்ற அந்தப் பாடல் வரி, எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்தின் முக்கிய மைல் கல்! அதை வடிவமைத்த திரைக்கதையில் நம்பியார் ஏற்ற கதாபாத்திரத்தின் நயவஞ்சகமும் நரித்தனமும்தாம் மிக முக்கிய இடத்தை வகித்தன என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எத்தனையோ படங்களில், எம். ஜி. ஆர்., நம்பியாரைத் தனது மென் புன்னகையால் வரவேற்பார். அவரைத் தமது கள்ளச் சிரிப்பால் எதிர்கொள்வார் நம்பியார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்
எம். ஜி.ஆரைத் தனது கடல் கொள்ளைக்கு உதவியாக வரவழைக்க மேற்கொள்ளும் தந்திரம், ஜெயலலிதாவை எப்படியாவது கவர்ந்து செல்ல வகுக்கும் திட்டம் இவையெல்லாம் ஒரு பக்கம். ஆனால், வேறு படங்களில் அமையாத ஒரு காட்சி ‘ஆயிரத்தில் ஒருவ’னில் இடம் பெற்றிருந்தது - கதாநாயகன் தன் தோழர்களோடு உற்சாகக் குரலெடுத்துப் பாடுகையில் அந்தக் காட்சியில் துள்ளிக் குதித்து ரசித்து ரசித்துச் சிரிக்கும் புதுமையான வில்லனாக நம்பியார் தோன்றியிருப்பார்.
ஒரு நாள் தனது வீட்டிலிருந்து தனியாகக் காரில் கிளம்பி சிறிது தூரம் சென்றிருப்பார். நான்கைந்து நபர்கள் அவரது காரைச் சூழ்ந்து கொண்டனர். அதில் உயரமாக, நல்ல உடற்கட்டோடு இருந்த ஒருவன் அந்த நடிகரைப் பார்த்து, "எதுக்கு எங்கண்ணனை அடிச்ச?" என்று கோபமாகக் கேட்டான். நடிகருக்கோ பெரும் குழப்பம். அந்த இளைஞனை நோக்கி,
"ஏம்ப்பா...நீயே யாருன்னு தெரியாது. உங்கண்ணனை எனக்கெப்படி தெரியும்? நான் எப்போ அவரை அடிச்சேன்?" என்று குழப்பத்துடன் கேட்டார்.

"ஓ..அப்போ எங்கண்ணன் மக்கள் திலகத்தை உனக்கு தெரியாதா?"
"மக்கள் திலகமா? ஓ..நீ எம் ஜிஆரை சொல்றியா?"
"ஆமா..அவரை நீ ஏன் அடிச்ச?"
"அதுக்குத்தானப்பா எனக்கு காசு கொடுக்குறாங்க? அடிச்சிதான ஆகணும்?"
"ஓ காசு கொடுத்தா நீ அடிப்பியா?"
"அவருந்தானப்பா என்னை அடிச்சாரு.. நீ பார்க்கலயா அதை?"
"அவரு உன்னை அடிக்கலாம்யா..அவருக்கு அந்த உரிமை இருக்கு...ஆனா நீ எப்படி அவரை அடிச்ச? இனிமே அடிக்கக்கூடாது சரியா?"
நடிகருக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் கூட அதை அடக்கிக் கொண்டார். நாமோ தனியாக இருக்கிறோம்..அவர்களோ நான்கைந்து பேர். எதற்கு வம்பு என்று நினைத்த அவர்,"சரிப்பா இனிமே அடிக்கல..போதுமா?" என்று சமாதானமாகக் கூற, மகிழ்ச்சியடைந்த அந்த இளைஞர்கள் எல்லாம் கோரஸாக," ஓகே.. நம்பியார் வாழ்க.." என்று கூறியபடியே சலாம் போட்டுவிட்டு காரை விட்டு அகன்றார்கள்.
இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட உரையாடல் இல்லை இது. நம்பியார் அவர்களே ஒரு நேர்காணலில் சொன்னது. ஆரம்பத்திலேயே சொன்னதுபோல், ஒரு திரைப்படத்தை பார்க்கும் மக்களால் எப்போது மனதார ஒரு நடிகன் வெறுக்கப்படுகிறானோ அப்போதுதான் அவன் முழுமையான வில்லன் நடிகனாக மாறுகிறான். அப்படித் தமிழ் சினிமாவில் முழுமையடைந்த ஒரு வில்லன் என்றால் அது சந்தேகமேயில்லாமல் திரு.எம்.என்.நம்பியார்தான்.

 

ஆனால் அவர் உண்மையில் ராமராக
தான் வாழ்ந்தார்.

பிரசாந்த் !

Leave a comment

Comment