சீனாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், தற்போது அரிய வகை தங்க நிறக் குரங்குகளின் இனப்பெருக்கக் காலம் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதியிலிருந்து இன்று வரை, அங்கு ஒவ்வொரு நாளும் புதிய தங்க நிறக் குரங்குக் குட்டிகள் பிறந்து வருகின்றன.
இப்பகுதியிலுள்ள வனவிலங்கு காப்பகத்தில் மட்டும் தற்போது 240-க்கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்து வருகின்றன.
வசந்த காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மரக்கிளைகளில் ஓய்வெடுக்கும் இந்தக் குரங்குகளின் ‘தங்க நிற’ முடிகள் காற்றில் அசைந்து ஜொலிப்பது, காண்பதற்கு மிக அழகாக உள்ளது.
அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் (Endangered Species) இடம்பிடித்துள்ள இந்தக் குரங்குகள், பொதுவாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவில் குட்டிகளை ஈனுகின்றன.
இந்நிலையில் தற்போது பிறந்துள்ள தங்க நிறக் குரங்குக் குட்டிகள், அந்த வனப்பகுதிக்கு மேலும் அழகூட்டுவதாகப் பூங்கா அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


