TamilsGuide

எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை.!

சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட் டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.

அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட் டார். மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.
அந்தப் பாடலில்,
‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’
என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார்.
எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு
என்றுமே குறைவில்லை.!
- தி இந்து .
 

 

Leave a comment

Comment