திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது எம்.ஜி.ஆர்-கருணாநிதி இருவருக்குமிடையே நடந்த கருத்துமோதல்களும் அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் தெரிந்தவிஷயம். அதிமுக துவங்கி சில ஆண்டுகள் கழிந்தபின் நடந்த சம்பவம் அது.
கருணாநிதி-எம்.ஜி.ஆர் மோதல் உச்சத்திலிருந்த நேரம். ஒரு மேடையில் கருணாநிதியை கடும் வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு எம்.ஜி.ஆரை வந்து சந்தித்தார் அந்த இரண்டாம் கட்டத்தலைவர். இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். இரண்டாம் கட்டத்தலைவர், தான் கருணாநிதியை மேடையில் வறுத்தெடுத்ததை எம்.ஜி.ஆரிடம் பெருமிதமாக கூறினார். தலைவர் நம்மை பாராட்டுவார் என்பது அவரது எண்ணம். ஆனால் அந்த தலைவர் கதையை சொல்லி முடித்த அடுத்த வினாடி எம்.ஜி.ஆர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச்சொன்னார்.
சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டத்தலைவரை காரை விட்டு இறங்கச்சொன்னவர், “ கருணாநிதியை மேடையில் கண்டபடி பேசியதோடு இல்லாமல் அதை என்னிடமே வந்துசொல்கிறாயா...கருணாநிதியை பெயர் சொல்லிப்பேச உனக்கு என்ன் அருகதை இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒருகாலத்தில் எனக்கு தலைவராக இருந்தவர். அப்படிப்பட்டவரை நேற்று அரசியலுக்கு வந்த நீ எப்படி இப்படி பேசுவாய்...நான் உனக்கு தலைவர்...உன் தலைவரான எனக்கே அவர் தலைவராக இருந்தவர் என்றால் அவருக்கு என்ன மரியாதை தரவேண்டும்...அரசியல் வெளிச்சத்தில் இன்று நீ வந்துவிட்டாய் என்பதற்காக பழசை மறக்கக்கூடாது. இனிமேலாவது மரியாதையாக பேசு” என சீறினார். பின்பு கிளம்பியது கார். சீறிச்சென்ற காரை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்துநின்றார் அந்த தலைவர். இப்படி அரசியலில் தங்கள் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.
## புரட்சித்தலைவரின் கடுங்கோபத்திற்கு ஆளான அந்தநபர் , அப்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த அண்ணன்ஜேப்பியார் .


