TamilsGuide

டொராண்டோ வீட்டு விற்பனை ஏற்பட்டுள்ள மாற்றம்

டொராண்டோ பெரும்பாக பகுதியில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக வீட்டு விற்பனை மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளதாக டொராண்டோ பிராந்திய வீட்டு மனை சங்கம் (TRREB) தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 5,039 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.7 சதவீத வளர்ச்சியாகும். கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு பதிவான முதல் விற்பனை உயர்வு இதுவாகும்.

மேலும், பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப விற்பனை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

சந்தையின் இந்த முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த வீட்டு மனை சங்கத்தின் தலைவர் டேனியல் ஸ்டெய்ன்பெல்ட், சந்தை மீண்டும் சுறுசுறுப்படைவது ஊக்கமளிக்கும் அறிகுறி என்றும், கட்டுப்படியாகக்கூடிய விலைச் சூழலைப் பயன்படுத்தி அதிகமான குடும்பங்கள் வீடு வாங்க முன்வருவதையே இது காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், வீடுகளின் சராசரி விற்பனை விலை மார்ச் 2025-ஐ விட 6.7 சதவீதம் சரிந்து 1,017,796 டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், ஒரு சாதாரண வீட்டைக் குறிக்கும் பெஞ்ச்மார்க் விலையும் ஆண்டு அடிப்படையில் 7.4 சதவீதம் குறைந்துள்ளது.

சந்தையில் புதிய வீடுகளின் நிரம்பலைப் பொறுத்தவரை, மார்ச் மாதத்தில் 14,442 புதிய வீடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.

இது கடந்த ஆண்டை விட 16.7 சதவீதம் குறைவாகும். ஒட்டுமொத்தமாக சந்தையில் உள்ள வீடுகளின் இருப்பு 8 சதவீதம் குறைந்து, தற்போது 21,596 வீடுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment