TamilsGuide

கொடுத்து வைத்தவள்...

1963ஆம் வருடத்தின் இரண்டாவது மக்கள் திலகம் படமாக வெளியாகியது "கொடுத்து வைத்தவள்". பெரும்பாலும் ராமண்ணா படங்களில் நடனமாதுவாகவும் அதிகபட்சம் இரண்டாவது நாயகியாகவுமே அறியப்பட்டிருந்த ஈ.வி .சரோஜாவின் சகோதரர் இ.வி.ராஜன் தயாரிக்க ப.நீலகண்டன் இயக்கினார். புதியபறவை, மூன்று தெய்வங்கள் போன்றவற்றை இயக்கிய தாதா மிராசி முன்னரே இதற்குக்கதை திரைக்கதை அமைத்தார். அவர் இப்பணிகளைச் செய்த ஒரே புரட்சி தலைவர் எம்ஜியார் படம் இது . தயாரிப்பாளரின் சகோதரி கதாநாயகியாக, எல் விஜயலஷ்மி இரண்டாம் ஹீரோயினானார்..

கேவி மகாதேவன் இசையில் "பாலாற்றில் சேலாடுது"நான் யார் தெரியுமா என்ற கவியரசர் கண்ணதாசன் பாடலும், "நீயும் நானும் ஒன்று" எனும் மருதகாசியின் பாடலும் பி.சுசிலா குரலில் ஆலங்குடி சோமுவின் "மின்னல் வரும் சேதியிலே மழைபொழியும் மழைபொழியும்" பாடல்கள் இன்றும் ஒலிக்க நல்ல ஹிட்டாயின.

வசூலில் வெற்றி என்பதன் எல்லையைத் தொட்ட நல்ல படமாக இது மக்கள் திலகம் எம்ஜியாருக்கு அமைந்தது. ஒரு பெண்ணைக் காதலித்து, அவள் தகப்பனார் எம்ஆர் ராதா அனுப்பிய அடியாளால் ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட அதிர்ச்சியில் புத்தி பேதலித்து, பைத்தியமாகத் திரியும் காலத்தில் சித்தி கொடுமையால் தவிக்கும் ஈவி சரோஜாவை மணக்க நேரிட்டு, பின்னர் ராதாவாலேயே குணமாக்கப்பட்டு ஈவிசரோவை மறந்து, எல்வியை திருமணம் செய்ய முற்படும் நேரத்தில் பைத்தியம் போல நடித்து ஈவிச.வின் உண்மைக் காதலை அறிந்து - என்று ஏறத்தாழ கணேசன் படங்களில் ஒன்றான அமரதீபம் பாணியில் சோகமாய் அமைந்ததாலோ என்னவோ தலைவர் ரசிகர்களால் இது பெருமளவில் ரசிக்கப்படாமல் போனது. ஆனாலும், மக்கள் திலகம் எம்ஜியார் தன் வழக்கமான ஆக்ஷன் பாணியை விடுத்து குணசித்திரமாக நடித்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று; சித்தம் தவறியவனாக அவர் தோன்றும் காட்சிகளில் அவர் நடிப்பு இயற்கையானதாக மெய்சிலிர்க்க வைக்கும், இயற்கையாகவே சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம்.. தலைவர் பைத்தியமாக நடித்த மற்றொரு படம் குடியிருந்த கோயில்; அதில் அந்த கதாபாத்திரத்தின் அடிப்படைக் குணத்திற்கொப்ப பைத்தியமாக இருக்கும்போதும் வயலண்டானதாகவே அவர் 
பாடி லாங்குவேஜ் அமைந்திருக்கும்; இதிலோ, ஒரு அமைதியான சுபாவம் கொண்ட நபர் புத்தி தடுமாறுவதால் பணிந்து போகும் தன்மை கொண்ட பைத்தியமாகவே அந்தக் காட்சிகளில் தோன்றுவார்.

இந்தப் பட டைட்டிலில் ஈவி சரோஜாவின் பெயர் சரோஜாராமண்ணா என்றே அளிக்கப்பட்டது. படத்தை ஏனோ ராமண்ணா இயக்கவில்லை பட டைட்டிலின்படி முழு இயக்கமும் ப.நீலகண்டனே.

Leave a comment

Comment