தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்பாக அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை-இரட்டை இலக்கங்கள் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் சந்திக்கும் சிரமங்களே போராட்டத்திற்கான முதன்மைக் காரணம் என செயற்குழு உறுப்பினர் அதன் டி.வி. சாந்த சில்வா தெரிவித்தார்.
தற்போதுள்ள அமைப்புமுறை எரிபொருள் நிலைய நடத்துநர்களுக்கும் ஊழியர்களுக்கும் கணிசமான சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6% இலாபத்தைப் பெற்றுக்கொள்வதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், ஓடர் செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் டி.வி. சாந்த சில்வா சுட்டிக்காட்டினார்.


