ஈரான் வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாகவும், அதன் குழுவினரில் ஒருவரை அமெரிக்கப் படைகள் மீட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக அமெரிக்க போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், விமானத்தின் சிதைவுகள் குறித்த காணொளிகளை ஈரான் ஊடகங்கள் ஒளிபரப்பின. இதைத் தொடர்ந்து, முக்கிய அமெரிக்க ஊடகங்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து தப்பித்த இரு விமானிகளில் ஒருவரை மீட்டதாக செய்தி வெளியிட்டன.
அடையாளம் தெரியாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி, விமானத்தில் இருந்த இரண்டு பணியாளர்களில் ஒருவர் அமெரிக்க சிறப்புப் படைகளால் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் இரண்டாவது பணியாளரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆக்சியோஸ் மற்றும் சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளன.
தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவற்றின்படி, அந்த விமானம் ஒரு F-15E ரக போர் விமானமாகும். இதில் ஒரு விமானியும், பின் இருக்கையில் ஒரு ஆயுத அமைப்பு அதிகாரியும் இருப்பார்கள்.
அதிபர் டொனல்டு டிரம்புக்கு நிலைமை குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகையிடம் இருந்தோ அல்லது பென்டகனிடம் இருந்தோ உடனடியாக அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.
டிரம்ப் போருக்கு உத்தரவிட்ட பிறகு ஈரானுக்குள் நிகழ்ந்த முதல் விமான இழப்பை தொடர்ந்து, அமெரிக்காவின் சிறப்பு படைகளால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


