ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, கனடாவின் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் மளிகைப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் வான்கூவர் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் எச்சரித்துள்ளனர்.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால் தனது வணிகச் செலவு ஏற்கனவே ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளதாக வான்கூவரில் உள்ள 'ஈஸ்ட் வெஸ்ட் மார்க்கெட்' (East West Market) உரிமையாளர் டேவிட் லீ க்வென் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை வாடிக்கையாளர்களின் நலன் கருதி விலையை உயர்த்தாமல் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும், ஆனால் இந்த நிலை நீடித்தால் நஷ்டத்தைத் தவிர்க்க விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, டீசல் விலை லிட்டருக்கு 269.9 சென்ட் வரை உயர்ந்துள்ளதால், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
சுயாதீன மளிகைக் கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் (CFIG) மூத்த துணைத் தலைவர் கேரி சாண்ட்ஸ் இது பற்றிக் குறிப்பிடுகையில், சிறிய மளிகைக் கடைகள் மிகக் குறைந்த லாப வரம்பிலேயே இயங்குவதால், இந்த விலை உயர்வுச் சுமையை அவர்களால் நீண்ட காலம் தாங்க முடியாது எனவும், அவ்வாறு விலையை உயர்த்தாவிட்டால் பல கடைகள் மூடப்படும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலிபோர்னியாவிலிருந்து வரும் ஒரு லாரி காய்கறிகளுக்கான எரிபொருள் செலவு 500 டொலர் முதல் 700 டொலர் வரை அதிகரித்துள்ளதால், ஒரு கட்டு கீரை முதல் அனைத்து பொருட்களின் விலையிலும் சில சென்ட்டுகள் உயரும் போது, ஒரு மாத மளிகைப் பட்டியலில் அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று போக்குவரத்துத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, கனடா தனது உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி உலகளாவிய விநியோகச் சங்கிலி மீதானச் சார்பைக் குறைக்க வேண்டும் என்பதே வணிகர்களின் கோரிக்கையாக உள்ளது.


