TamilsGuide

கட்டுமானத் தொழிலாளர்கள் வேடமிட்டு 1 மில்லியன் டொலர் கொள்ளை

டொராண்டோ மற்றும் யார்க் பிராந்தியத்தில் உள்ள உயர்தர சொகுசு வீடுகளில் கட்டுமானத் தொழிலாளர்கள் போல வேடமிட்டு, சுமார் ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக டொராண்டோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த (GTA) மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

'புராஜெக்ட் காம்பஸ்'  என்ற பெயரில் கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் மாதம் முதல் டொராண்டோ காவல்துறையின் 14-வது டிவிஷன் குற்றப்பிரிவினர், அடுக்குமாடி குடியிருப்புகளில் அரங்கேறி வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர்.

சந்தேக நபர்கள் பகல் நேரங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் அணியும் சீருடைகளை அணிந்து கொண்டு, யாரும் சந்தேகிக்காத வகையில் சொகுசு குடியிருப்புகளுக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்து விலை உயர்ந்த நகைகள், அரிய வகை உலோகங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் மற்றும் குடும்ப பாரம்பரியமிக்க மதிப்புமிக்கப் பொருட்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கொள்ளையடித்த பிறகு, புதிய மாடல் 'வெள்ளி நிற ஜீப் காம்பஸ்' (Silver Jeep Compass) ரக வாகனத்தில் அவர்கள் தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

டொராண்டோ மற்றும் யார்க் பிராந்தியம் முழுவதும் இதுபோன்று 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் வான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மிண்டியா ஜின்ட்சராஷ்விலி மற்றும் 35 வயதுடைய வலேரி மண்டாரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தலா 67 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதேபோல், டொராண்டோவைச் சேர்ந்த 49 வயதுடைய இமெடா கபுலியானி என்பவர் மீது 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றச் செயலுக்காக சதித் திட்டம் தீட்டுதல், அத்துமீறி நுழைதல் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என கருதும் காவல்துறையினர், சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment