ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் உறுப்பினருமான மிதிகம சூட்டி (Midigama Chuti) என்று அழைக்கப்படும் ராஜபக்ஷ பாதிரனகே பிரபாத் மதுசங்க, இன்று காலை (30) சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் ஓமானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இலங்கையின் பல நீதிமன்றங்களில் அவர் மீது கொலை, கொள்ளை, துப்பாக்கிகள் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
38 வயதான வயதான மிதிகம சூட்டியைக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்புப் படைகள் சர்வதேச சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், ஓமான் நாட்டில் அவர் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது பாதுகாப்புப் படைகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், இலங்கை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று ஓமானின் மஸ்கட் நகருக்குச் சென்று, இன்று காலை 04.27 மணிக்கு OV-437 சலாம் ஏர் விமானம் மூலம் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்தது.
அவருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தலைமையகத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


