• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா - ஈரான் இடையில் வலுக்கும் புதிய அழுத்தங்கள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் போர்ச் சூழலில், இரு நாடுகளும் உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை ஒரு 'அழுத்தக் கருவியாக' பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அரபு தொலைநோக்கு நிறுவனத்தின் (Arab Perspectives Institute) பணிப்பாளர் செய்டன் அல்கினாலி இவ்விடயத்தை தெரிவித்ததாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் இரு தரப்பும் புதிய பலப்பரீட்சைகளில் இறங்கியுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானைப் பொறுத்தவரை, உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணையை' தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

மறுபுறம், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை, அந்நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்குச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என அல்கினாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்கள் ஈரானிய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதுடன், போர் முடிவுக்கு வந்தாலும் கூட மீண்டெழுவதற்குப் பல வருடங்கள் எடுக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், இந்த எரிசக்தி அச்சுறுத்தல்கள் பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் பாரிய பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
 

Leave a Reply