இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா , இன்றைய தினம் காலை பக்திப் பெருக்கோடு நடைபெற்றது.
கடந்த மார்ச் 23-ஆம் திகதி விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம் மற்றும் யாகசாலை கிரியைகளுடன் ஆரம்பமான இப் பெருவிழா, தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறு விசேட பூஜைகளுடன் இடம்பெற்று வந்தது.
நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மூலமூர்த்திக்கு எண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 6.00 மணி முதல் விசேட விநாயகர் வழிபாடு, 4-ஆம் கால யாக பூஜை, கணபதி அஷ்டோத்திர ஹோமம் மற்றும் மஹா பூர்ணாகுதி ஆகிய கிரியைகள் ஆகம விதிகளின்படி நடைபெற்றன.
இப்புனித கும்பாபிஷேகப் பெருவிழாவினை கும்பாபிஷேக பிரதான குரு சிவாகம கிரியா ஜோதி சிவஸ்ரீ வைத்தியநாத வைகுந்தக் குருக்கள் மற்றும் ஆலய பிரதான குரு குமார ஸ்ரீனிவாச சர்மா (கண்ணன் ஐயா) ஆகியோர் முன்னின்று நடாத்தி வைத்தனர். இவர்களுடன் சர்வ சாதகமாக சபா பால பாஸ்கரக் குருக்களும், உதவி குருவாக பிரம்ம ஸ்ரீ குணா சர்மாவும் கலந்துகொண்டு கிரியைகளைச் செவ்வனே நிறைவேற்றினர்.
காலை 9.50 மணி முதல் 11.02 மணி வரையான இடப லக்ன சுபவேளையில், வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. இந்த ஆன்மீக நிகழ்வில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை இந்து மற்றும் தமிழ் மன்றத்தினர், பெற்றோர் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோ பூஜை, தசமங்கள தரிசனம் மற்றும் மஹா அபிஷேகம் என்பன நடைபெற்றதோடு, பக்தர்களுக்கு மதிய அன்னதானமும் வழங்கப்பட்டது.
இன்றைய கும்பாபிஷேக நிறைவைத் தொடர்ந்து, மாலை 4.00 மணி முதல் 12 நாட்களுக்குத் தொடர்ச்சியாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06-ஆம் திகதி (06.04.2026) திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு சங்காபிஷேகத்துடன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


