`அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பை கடந்து கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியானது.
யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் (மார்ச் 19) வெளியான நிலையில், யூத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், யூத் படத்தை பார்த்த நடிகர் சிலம்பரசன் படக்குழுவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், யூத் படக்குழுவினர் நடிகர் சிலம்பரசனை நேரில் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. புகைப்படங்களில் யூத் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் நடிகர் சிலம்பரசனுடன் நிற்கின்றனர். இதனை யூத் படத்தின் தயாரிப்பாளர் கருப்பையா சி ராம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்த பதிவில் அவர், "திரைத்துறைக்கு உங்களை போன்ற தயாரிப்பாளர்கள் தேவை, பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பண்ணுங்க - இந்த வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. யூத் படக்குழுவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி படத்தில் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி சிலம்பரசன் சார்.
இதுபோன்ற ஆதரவை தான் ஒவ்வொரு இளைஞரும் எதிர்பார்க்கின்றனர். இது உண்மையிலேயே வித்தியாசமாக உணர்கிறது. நீங்கள் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.


