காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) முக்கிய பங்கு வகிப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸின் கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரி (CPSC) மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ‘காலநிலைத் தன்மைகளுக்குத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளுக்காக TVET முறைமைகளை மாற்றுதல்’ எனும் சர்வதேச மாமாநாட்டில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில்;
‘வலுவான (TVET) முறைமையானது தனிநபர்களுக்கு எதிர்காலத்திற்குத் தேவையான நடைமுறைத் திறன்களை வழங்குவதுடன், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய புத்தாக்கங்களுக்கும் வழிவகுக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இந்த கல்வி முறைமை மாற்றம் ஒரு தேசிய முன்னுரிமையாகும்.’ எனத் தெரிவித்தார்.
மேலும், கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது, அது கௌரவம் மற்றும் சமூக பங்களிப்பை வழங்கும் ஆற்றலைப் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும் எனவும், பசுமை மாற்றத்தினால் உருவாகும் வாய்ப்புகள் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோர் என அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் பிராந்திய வேலைத்திட்டத்தில் பூட்டான், மலேசியா, மாலைதீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


