துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் (Aargau) மாநிலத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம் - நவாலியைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்ணின் 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அவரது குடும்பத்தினர் கடந்த வாரம் துருக்கிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்புவதற்காக இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு வாடகை வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பெண் , அவரது மகன் (28) ஆகியோருடன் 47 வயதான மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணித்த சிற்றூந்து விபத்தில் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அதிவேகம் அல்லது கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்து குறித்து துருக்கி காவல்துறை மற்றும் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


