ஒன்டாரியோ மாணவர் உதவித் திட்டத்தில் (OSAP) ஃபோர்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய மாற்றங்களை திரும்பப் பெறக் கோரி, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, குயின்ஸ் பார்க் (Queen’s Park) சட்டமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் (Grants) பெருமளவு குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கடன்கள் (Loans) அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 85 சதவீதமாக இருந்த மானிய உதவி, இனி 25 சதவீதமாக குறைக்கப்படும். மீதமுள்ள 75 சதவீத நிதியை மாணவர்கள் கடனாகவே பெற முடியும். ஏழு ஆண்டுகளாக அமலில் இருந்த கல்விக் கட்டண முடக்கம் (Tuition freeze) நீக்கப்பட்டு, கட்டண உயர்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் பசுமைக் கட்சி (Greens) ஆகியன இன்று காலை இது தொடர்பான தீர்மானங்களை முன்வைத்தன: இந்த மாற்றங்களை உடனடியாக ரத்து செய்து, பழைய முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது.
மாணவர் கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய மாணவர்களுக்குத் திரும்பச் செலுத்தத் தேவையற்ற மானியங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கோருகிறது. இளைஞர் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள சூழலில், மாணவர்கள் பெரும் கடன் சுமையுடன் பட்டப்படிப்பை முடிக்க நாங்கள் விரும்பவில்லை," என பசுமைக் கட்சித் தலைவர் மைக் ஷ்ரைனர் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறை அமைச்சர் நோலன் குவின் (Nolan Quinn), தற்போதைய OSAP நடைமுறை "நீடிக்க முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த நான்கு ஆண்டுகளில் கல்வித் துறைக்காக மேலதிகமாக 6.4 பில்லியன் டொலா் நிதி ஒதுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த மாற்றங்கள் உயர்கல்வியை எட்டாக்கனியாக்கும் என்றும், வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத கடன் சுமைக்கு மாணவர்களைத் தள்ளும் என்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை நடைபெறவுள்ள "எதிர்க்கட்சிகள் தினத்தில்", NDP மற்றும் லிபரல் கட்சிகள் இந்த விவகாரத்தை மீண்டும் சட்டமன்றத்தில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


