யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் தொடர்பான விவாதத்தின் போது, செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் குறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் ஒரு இயக்கம் எனக் குறிப்பிட்டார்.
கடந்த 25 ஆண்டுகளில் செய்யப்படாத பல பணிகள் தற்போதைய குறுகிய கால ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
1999ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட செம்மணிப் புதைகுழியில், 2024ஆம் ஆண்டு வரை 25 வருட காலப்பகுதியில் வெறும் 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தும், செம்மணி விவகாரத்தில் அவர்கள் ஏன் மௌனம் காத்தார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த கடந்த 17 மாதங்களில் மட்டும் 239 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது முறையற்றது என்றார்.
செம்மணி அமைந்துள்ள தொகுதியில் மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில், நீதித்துறை பொறிமுறையூடாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது தவிர மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நீதி நிலைநாட்டப்படும் போது அதற்கான கால அவகாசம் தேவைப்படும் என்றும், சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


