TamilsGuide

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது 

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த மற்றும் கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (20) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் ஹங்வெல்ல, களுத்துறை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல எமுல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிய அனுமதிப்பத்திரமின்றி 645 லீற்றர் டீசலை வைத்திருந்த 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

களுத்துறை வடக்கு போசிரிபுர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 35.5 லீற்றர் பெட்ரோலை வைத்திருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுமெண்டல் பகுதியில் லொறி ஒன்றைச் சோதனையிட்ட போது, அதில் 10 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்த 2,000 லீற்றர் டீசல் கண்டறியப்பட்டது.

எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி இந்த எரிபொருளைக் கடத்திச் சென்ற 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட எரிபொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பாக அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
 

Leave a comment

Comment