TamilsGuide

அமெரிக்க விசாவுக்கான பிணைத் தொகை - புதிய நிபந்தனை

அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் குறிப்பிட்ட 50 நாடுகளின் பிரஜைகளுக்கு 15,000 அமெரிக்க டொலர்கள் வரை 'விசா பிணைத் தொகை' (Visa Bond) செலுத்தும் புதிய நடைமுறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மார்ச் 18, 2026 அன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட பட்டியலில், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய நிபந்தனை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலாவதி காலத்தை மீறி தங்குபவர்களை (Overstay) கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படும் அடிப்படையில், 5,000, 10,000 அல்லது 15,000 அமெரிக்க டொலர்கள் பிணைத் தொகையாகச் செலுத்தப்பட வேண்டும்.

வணிகம் அல்லது சுற்றுலாவுக்காக (B1/B2 Visa) அமெரிக்கா செல்லும் பங்களாதேஷ், நேபாளம், நைஜீரியா உள்ளிட்ட 50 நாடுகளின் பிரஜைகளுக்கே இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த பிணைத் தொகையைச் செலுத்தி அமெரிக்கா செல்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வணிக ரீதியிலான வானூர்தி நிலையங்கள் ஊடாக மட்டுமே நாட்டிற்குள் நுழையவும் வெளியேறவும் முடியும். தரைவழி அல்லது கடல்வழிப் பயணங்கள் இவர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

பிணைத் தொகையைச் செலுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரபூர்வ 'Pay.gov' தளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பு இணையதளங்கள் ஊடாகச் செலுத்தப்படும் பணத்திற்கு அமெரிக்க அரசாங்கம் பொறுப்பேற்காது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுபவர்களுக்கு இந்த பிணைத் தொகை மீண்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment