இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனம் தலைமையிலான ஒரு மூலோபாய கூட்டு முயற்சியான கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) தனது முதல் முழு ஆண்டு செயல்பாட்டில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்களை (இருபது அடிக்கு இணையான அலகுகள்) கையாண்டுள்ளது.
சுமார் 800 மில்லியன் டொலர் முதலீட்டில் 2025 ஏப்ரலில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், கொழும்பு துறைமுக வரலாற்றிலேய இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வேகமான செயல்பாட்டு விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
இந்த முனையம், APSEZ, இலங்கை பெருநிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்.
புதிய கொள்கலன் முனையங்கள் நிலைபெற்று, சரக்குக் கையாள் திறனை அதிகரிப்பதற்குப் பொதுவாகப் பல ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் 12 மாதங்களுக்குள் பத்து லட்சம் கொள்கலன்கள் என்ற இலக்கை எட்டியது.
இந்தச் செயல்திறன், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பல புதிய தானியங்கி துறைமுக முனையங்களை விஞ்சுகிறது.
அவை தங்களின் முதல் கட்டத்தில் ஒப்பிடத்தக்க பயன்பாட்டு நிலைகளை எட்டுவதற்கு வரலாற்று ரீதியாக அதிக காலம் எடுத்துக்கொண்டன.
முக்கிய கப்பல் நிறுவனங்களுடன் இந்த முனையம் உடனடியாக இணைந்திருப்பதும், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஏற்கனவே உள்ள சரக்கு மாற்றுச் சூழல் அமைப்பில் இது ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும் தான் இந்த விரைவான வளர்ச்சிக்குக் காரணம் எனத் தொழில்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் வெற்றியானது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முதன்மை சரக்கு மாற்று மையமாக கொழும்பின் பங்கை வலுப்படுத்துகிறது.
இந்த முனையத்தின் சரக்கு அளவில் கணிசமான பகுதி இந்திய சரக்கு மாற்றுகளுடன் தொடர்புடையதாக இருப்பதால், இது இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது.


