TamilsGuide

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று(18) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை கொடிச்சீலையானது கடல்நாச்சியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலயகத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

சுமார் 500வருடங்களுக்கு மேல் பழமையான இந்த ஆலயமானது கிழக்கு மாகாணத்தில் பழமையானதும் தொன்மையானதுமான ஆலயங்களுல் ஒன்றாகவும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் உள்ளது.
ஆலயத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலையும் உற்சவ மூர்த்தியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொத்தம்பத்தில் நடைபெற்ற விசேட பூஜைகள் வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் நாத வேதபராயணம் முழங்க மேளதாள இசையுடனும் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கணேசாலயா நாட்டியப ள்ளி மாணவர்களின் நடன ஆற்றுகையும் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டபபூஜை, சுவாமி உள்வீதி, வெளிவீதியுலா நடைபெறும்.
குறிப்பாக முக்கிய திருவிழாக்களான மாம்பழத் திருவிழா, திருவேட்டைத் திருவிழா 31ஆம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன் மறுநாள் 01ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவமும் பொன்னூஞ்சலும்; நடைபெற்று கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.

மஹோற்சவ கால கிரியைகள் அனைத்தும் பிரம்மஸ்ரீ நித்திய சிவானந்தக்குருக்கள் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றன.
 

Leave a comment

Comment