தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவையை வழங்குவதாகக் கூறி, போலியான சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பொதுமக்களை எச்சரிக்கிறது.
வலைத்தள பயனர்களை தவறாக வழிநடத்தவும் அவர்களது தனிப்பட்ட நிதி தொடர்பான தகவல்களை திருடவும் நிகழ்நிலையில் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை (Link) க்ளிக் செய்யவோ, அதிகாரபூர்வமற்ற வலைத்தளங்கள், செய்தி இணையத்தளங்கள் அல்லது சமூக ஊடகங்களின் மூலம் பகிரப்படும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவோ வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மோசடியில் ஈடுபடுபவர்கள், இணையத்தள பயனர்களை ஏமாற்ற, வேண்டுமென்றே சிறிது மாற்றப்பட்ட எழுத்துப்பிழைகளை கையாளக்கூடும். ஆகையால், URLஇல் உள்ள வலைத்தள பெயர்கள் மற்றும் எழுத்துக்களை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே ஒரு அதிகாரபூர்வ வலைத்தளமாக https://fuelpass.gov.lk என்பதே விளங்குவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அறிவித்திருப்பதோடு, சைபர் தொடர்பான குற்றங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் குழுவில் புகாரளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


