TamilsGuide

எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும் - 20% நுகர்வைக் குறைக்க இலக்கு

எரிபொருள் விநியோகம் மற்றும் QR முறைமை தொடர்பாக முக்கிய அறிவிப்பொன்றை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா வழங்கியுள்ளார்.

மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என்றும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரிசைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த QR முறைமை அவசரமாக அமுல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

QR குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வை 20% ஆல் குறைக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள கையிருப்பு மற்றும் மார்ச் மாதம் கிடைக்கவுள்ள உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதி வாரம் வரை தடையின்றி எரிபொருளை வழங்க முடியும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், மசகு எண்ணெய் (Crude oil) இறக்குமதி செய்வதில் இன்னமும் சவால்கள் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவு தொடர்பான தீர்மானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

“இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாத நிலையில், இப்போது நாம் சில அர்ப்பணிப்புகளைச் செய்து எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்தால் மட்டுமே எதிர்கால அபாயத்திலிருந்து தப்ப முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.

எரிபொருள் கப்பல்களை முழுமைப்படுத்துவது தொடர்பாக இன்றைய தினம் (17) எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் தீர்மானமிக்கவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment