TamilsGuide

ஈரானின் முக்கியஸ்தலத்தை அழிக்க துடிக்கும் அமெரிக்கா - ட்ரம்பின் மிரட்டலால் காத்திருக்கும் பெரும் ஆபத்து

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

தவிர ,''ஒரு கேளிக்கைக்கு கூட அந்த தீவின் மீது தாக்குதல் நடத்தினால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை,'' என கிண்டலாக பேசியுள்ளார்.

ஈரானின் கடற்கரையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கார்க் தீவு. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்த தீவின் வழியாகவே ஈரான் கையாள்கிறது. இதனால், கார்க் தீவு ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக திகழ்கிறது.

தவிர, இத்தீவு ஈரானின் வலுவான ராணுவ தளமாகவும் செயல்படுகிறது. இங்கு ஈரானிய கடற்படை தளங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் இருப்பதால், கார்க் தீவை ஒரு கண்காணிப்பு நிலையமாகவும் ஈரான் பயன்படுத்தி வருகிறது-.

கடந்த 13ம்திகதி கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதி செய்தார்.

இத்தாக்குதலில், கார்க் தீவில் உள்ள 90க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும், கடற்படை கண்ணி வெடி சேமிப்பு மையங்கள், ஏவுகணை பதுங்கு குழிகள் மற்றும் ராணுவ விமான நிலையங்களும் இதில் அடங்கும் எனவும் அவர் அறிவித்தார்.

இத்தாக்குதலில், ஈரானின் பொருளாதாரத்திற்கு ஆணி வேராக விளங்கும் எண்ணெய் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில், வேண்டுமென்றே தாக்கவில்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கார்க் தீவு மீது தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
 

Leave a comment

Comment