(மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1969 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஆரம்பத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக அறிமுகமானார். 1971இல் மாதர், மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராக உயர்ந்தார். இறக்கும் வரை இவர் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். வானொலியில் இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி, கவிதைசெண்டு என பல சுவையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனல், கொழும்பு சர்வதேச ஒலிபரப்பின் பொதிகைத் தென்றல் நிகழ்ச்சிகளில் ஈரடிக் கவிதை கொண்டு திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கி வந்தது இராஜேவரி சண்முகத்தின் தனிப்பாணியாகும்.
இராஜேசுவரி சண்முகத்தின் நேர்காணல்கள் இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தினமலர், தினகரன், ராணி, மங்கை, தேவி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.


