மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் நாட்டின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் ஜனாதிபதி இன்று (15) விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.
சுகாதாரம், கல்வி, விவசாயம், கைத்தொழில் மற்றும் கடற்றொழில் ஆகிய துறைகளின் தற்போதைய எரிபொருள் தேவைகள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சுகாதாரத்துறை போன்ற மிக அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் எனவும் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு ‘வீட்டிலிருந்து பணியாற்றும்’ (Work from home) முறைமை குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையில் உள்ள குறைபாடுகளை மிக விரைவில் திருத்தியமைத்து, அதனை மேலும் முறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எதிர்கால நிலைமைகளை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த தேசத்தையும் கருத்திற் கொண்டு மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அமைச்சுகளுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான விஜித ஹேரத், சதுரங்க அபேசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.


