TamilsGuide

பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

கொ*லை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘பட்டுவத்த சாமர’ என்ற மனோஜ் சுரங்க என்பவரின் மனைவியின் பெயரில் ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 400 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடி வீட்டை 7 நாட்களுக்கு தடை செய்வதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

படுவத்த சாமர என்பவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வௌியானதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டை இரண்டு மாதங்களுக்கு முன்பு மற்றொரு தரப்பினர் வாடகைக்கு எடுத்து முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அங்கு தங்கியிருந்த 9 முதியவர்களும் 4 தாதியர்களும் நேற்று அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

படுவத்த சாமரவின் மனைவியான சதுரிக்கா வீரசூரிய இதற்கு முன்னர் இந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், மூன்று சந்தர்ப்பங்களில் இந்த வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இறுதியாக கடந்த 7ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சொத்து தொடர்பாக மேல் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டு, அதன் பின்னர் தடை உத்தரவை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment