TamilsGuide

ஏனென்றால் இந்தியா எங்கள் நண்பன் - ஹார்முஸ் ஜலசந்தி விலக்கு குறித்து ஈரான் தூதர் நெகிழ்ச்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையே நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி தேவைகளில் பெரும் பகுதி இந்த வழியாகவே வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், போர் தொடர்பாக ஈரானுக்கு எந்த ஆதரவும் தெரிவிக்காதபோதும் இந்தியாவிற்கு மட்டும் இந்தச் சிறப்பு விலக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி,

"ஏனென்றால் இந்தியா எங்கள் நண்பன். இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் நீங்கள் அதைக் காண்பீர்கள். பிராந்தியத்தில் ஈரானும் இந்தியாவும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய மக்களின் துயரம் எங்களது துயரம், அதுபோலவே எங்களுடையதும். இதன் காரணமாகவே இந்திய அரசாங்கம் எங்களுக்கு உதவுகிறது. நமக்குள் பொதுவான நம்பிக்கையும் பொதுவான நலன்களும் இருப்பதால், நாமும் இந்திய அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்.

எனது உரையில் நான் குறிப்பிட்டது போல், இந்திய அரசாங்கத்துடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் நேற்று இந்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பல்வேறு துறைகளில் உள்ள அனைத்துத் தடைகளையும் நீக்குமாறு நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிரச்சினைகளை நீக்குவதற்கு நாங்கள் எங்களால் இயன்றவரை முயற்சி செய்தோம்" என தெரிவித்தார். 
 

Leave a comment

Comment