TamilsGuide

என்னைத் தோளில் சுமந்த எம்.ஜி.ஆர்.. - விஜயா - வாகினி அதிபர் நாகிரெட்டி

எங்க வீட்டுப் பிள்ளையின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர். தனக்கு அதிக லாபம் வந்ததால் ஒரு தொகையை எங்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா இண்டர்நேஷனல் பெயரில் ஒரு லட்ச ரூபாய்க்கான செக் அனுப்பி வைத்தார். அத்துடன், நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தத் தொகையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

ஆனால், அந்தப் பணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும் இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை உங்கள் விருப்பப்படி தர்ம காரியத்திற்கு பயன்படுத்துங்கள்' என்ற கடிதத்துடன் செக்கை திருப்பி அனுப்பிவிட்டோம்.

வாழ்வில் எவ்வளவோ பேரைத் தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர். ஒரு சந்தர்ப்பத்தில் என்னைத் தோளில் சுமந்தார் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.

"எங்க வீட்டுப் பிள்ளை' படம் எடுத்து முடித்த நேரம். தமிழகம் எங்கும் படம் வெளியிட்டாகி விட்டது. நாளுக்கு நாள் அதற்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எம்.ஜி.ஆருக்கு மிகவும் சந்தோஷம். மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்க அவர் ஆசைப்பட்டார். நானும் ஒப்புக் கொண்டேன்.

சென்னையில் "எங்க வீட்டுப் பிள்ளை' நடைபெற்ற ஒரு திரையரங்குக்கு அவருடன் நானும் சென்றேன்.

சென்ற இடத்தில் மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டார்கள். அவரைச் சூழ்ந்துவிட்டனர். கூட்டத்தில் நான் சிக்கிக் கொண்டேன். எம்.ஜி.ஆர். எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு தன் காரை நோக்கிப் போய்விட்டார். நானோ, மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன்.

எளிதாக, அந்த வெள்ளத்திலிருந்து மீண்டு வர என்னால் முடியவில்லை. காருக்கு அருகே சென்றதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடிப் பார்த்தார். நான் அங்கு இல்லை .உடனே, அவர் மக்கள் வெள்ளத்தை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். என்னை அலக்காகத் தூக்கி தன் தோளிலே வைத்தார். ஒரு ஹீரோ மாதிரியே தூக்கி என்னை காரில் வைத்துவிட்டு "விர்'ரென்று நடந்தார் தன் காரை நோக்கி.

வேறு காரில் என்னை அழைத்து வரச் சொல்லி இருக்கலாம். ஆனால் தன்னை நம்பி வந்தவரை, காரியம் முடிந்தவுடன் நடுவழியில் விட்டுச் செல்லாமல் அவரை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை.

மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மகிழ்ச்சி உணர்வுடன் நான் இருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆரோ ஏதும் நடக்காததுபோல சர்வ சாதாரணமாக இருந்தார். இந்தப் பண்பு, தோழமை உணர்வுதான் அவரை தமிழகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது.

- விஜயா - வாகினி அதிபர் நாகிரெட்டி

Leave a comment

Comment