பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். இதற்காக ஈரோடு அசோகபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி ஜவுளி மற்றும் பனியன் மார்க்கெட்டுக்கு தனது குழுவினருடன் நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
அப்போது அங்கு இரவு முழுவதும் படப்பிடிப்பை நடத்தி தேவையான காட்சிகளை நடத்தி முடித்துள்ளார்.
பின்னர் நேற்று காலை ஜேசன் சஞ்சய் மார்க்கெட்டில் பணியாற்றும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது தொழிலாளர்கள் தங்களது செல்போனில் சஞ்சயுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் சஞ்சயும் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஒரு பெரிய நடிகரின் மகன் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக வந்து சகஜமாக பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பின்னர் ஜோசன் சஞ்சய் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு தனது குழுவினருடன் கிளம்பி சென்றார்.


