“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தலைமையில் நேற்று (10) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் சுயதொழில் முயற்சியார்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், சுயதொழில் முயற்சியார்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்றன.
இதன்போது பெண் சுயதொழில் முயற்சியார்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் மகளிர் தினத்தை அலங்கரித்தன.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன், கணக்காளர் வ.நாகேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் கே.கருணாநிதி, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட மகளிர் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வு, பட்டிமன்றம், மருத்துவ பரிசோதனை முகாம் போன்ற பல நிகழ்வுகளும், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


