" அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனை, சென்னையில் நடைபெற்ற "நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக் கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் "நாடோடி மன்னன்' விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!''
( 23 - 4 - 1961 , திராவிடநாடு )


