இலங்கையில் இருந்த தியேட்டர்களின் அன்றைய முகப்புகள் தமது போஸ்டர் நெற்றியிலே சிவாஜி என்ற மூன்றெழுத்து திலகத்தையே அடிக்கடி தீட்டி அழகு பார்க்கும். இதனால்தான் அன்றைய அரங்க உரிமையாளர்கள் வசூல் என்ற மூன்றெழுத்துக்கு வாரிசாக முடிந்தது. வசூல் என்ற மூன்றெழுத்தை நடிகர் திலகம் தமது நடிப்பிலும், அவரது ரசிகர்கள் தமது ரசனா உணர்விலும் பிரதிபலித்ததால்தான் சாதனை என்ற மூன்றெழுத்து சிவாஜி படங்களுக்கு சரித்திர கௌரவம் கொடுத்தது.
இதுவரை இலங்கையில் திரையிடப்பட்ட படங்களில் ஒரு **'பைலட் பிரேம்நாத்'**தும், **'வசந்த மாளிகை'**யும் அகலப் பதித்த சாதனையை வேறு எந்த நடிகரின் படமும் சாதித்தது இல்லை. அன்றிலிருந்து இன்று வரை வசூல் சக்கரவர்த்தி என்ற பெயரை ஈழத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கே முதன்முதலாக என்ற பதத்தைப் பிரயோகித்து சில சாதனைப் பட்டியல்களைக் கூறுவது வழமை. இதற்கு சினிமா துறை மட்டும் விதிவிலக்கல்ல. இலங்கை திரை வரலாற்றைப் பொறுத்தவரை இந்த முதன்முதலாக என்ற சாதனைப் பட்டியல் பலவற்றுக்கு சிவாஜி அவர்களே சொந்தக்காரராக இருக்கிறார். அந்தச் சாதனைப் பட்டியல்கள் எல்லாம் சம்பவக் கோர்வைகளாக இங்கே எழுதினால் அதற்கு ஒரு தனி புத்தகம் போதாது. எனவே அவற்றில் சிலவற்றை மட்டுமே இங்கு சொல்கிறேன்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணப் பெருநகரில் எந்த ஒரு படமும் ஒரே ஒரு அரங்கில் மட்டுமே திரையிடப்படும். ஏனெனில் அதுவே அந்த எல்லைப் பரப்பில் வசிக்கும் மக்களுக்குப் போதுமானது. தமிழ்ப் படங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் போது மூன்றே மூன்று பிரதிகள் மட்டுமே தருவிக்கப்படும். அதில் இரு பிரதிகள் தலைநகர் கொழும்பிலும், மறு பிரதி யாழ் நகரிலும் திரையிடப்படுவது வழமை.
1972-ல் வசந்த மாளிகை திரையிடப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்துக்கென ஒரே ஒரு பிரதி மட்டுமே வழங்கப்பட்டது; வெலிங்டன் தியேட்டர். ஆனால் அந்த ஒரே ஒரு பிரதி மட்டும் வைத்துக்கொண்டு அரங்கின் முன்பே ஆயிரக்கணக்காக முட்டி மோதிய ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு அரங்கிலாவது படத்தைத் திரையிட்டாலேயே நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நிலை தோன்றியது. ஏனெனில் வெலிங்டன் அரங்கு அமைந்துள்ள ரோட்டின் வாகனப் போக்குவரத்தையே தடை செய்யக்கூடிய அளவுக்குக் கூட்டம் குவிந்து நின்று, ஒரு மூன்று மணி நேரமாவது வசந்த மாளிகையில் வாழ்ந்து விட வேண்டும் என்று அங்கே மூர்க்கமான ஒரு வரிசை தவம் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காகக் கொழும்பில் இருந்து ஒரு மேலதிகப் பிரதியை இரவில் கேட்க முடியாது. ஏனெனில் கொழும்பிலும் இதே நிலைமைதான். மேலும் அது தலைநகரம் ஆயிற்றே, கண்டிப்பாக அங்கே இரு பிரதிகள் தேவை. எனவே யாழ் நகரில் இருக்கும் ஒரு பிரதியை வைத்தே நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தியேட்டர் நிர்வாகம் சிந்தித்தது. உடனே ஒரு சமயோசிதமான ஒரு முடிவு எடுத்து அமல்படுத்தியது.
ஆமாம், இருக்கின்ற ஒரே ஒரு பிரதியை வைத்துக்கொண்டே இரண்டு அரங்குகளில் படம் ஒரே நாளில் திரையிடப்பட்டது.
ஒரே பிரதியை வைத்துக்கொண்டு இரண்டு தியேட்டர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்கிறீர்களா? வெலிங்டன், லிடோ என்ற இரு தியேட்டர்கள் இரண்டிலும் காட்சி நேரங்கள் 15 நிமிட இடைவெளி இருக்கத்தக்கதாக அமைக்கப்பட்டன. ஒரு அரங்கில் காலைக் காட்சி 10 மணிக்கு ஆரம்பமானால், மறு அரங்கில் காலை 10:15 மணிக்கு ஆரம்பமாகும். இப்படி நான்கு காட்சிகளிலும் 15 நிமிட இடைவெளிகள். ஒவ்வொரு ரீலாக படம் ஓடி முடிய, ஒரு டாக்ஸி மூலம் அது மறு தியேட்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படி கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை ஒரே பிரதியை வைத்துக்கொண்டு இரு அரங்குகள் மூலம் தியேட்டர் நிர்வாகத்தினர் சமாளித்தனர். அவர்களுடைய சமயோசித புத்தியை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது.
அடுத்து கதை வசன ரெக்கார்டுகளின் விற்பனை சாதனையில் 50-களில் **'பராசக்தி'**யும் **'மனோகரா'**வும் நிலைநாட்டிய சாதனையில் பாதிப் பங்கைக் கூட இலங்கையில் வேறு எந்த ரெக்கார்டுகளும் முறியடிக்கப்படவில்லை. ஆனால் 70-களில் இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது என்பது உண்மைதான். எனினும் கூட அதில் நடிகர் திலகத்துக்குத் தான் பெருமை. ஆமாம், 70-களில் அமோகமாக விற்பனையான 'தங்கப்பதக்கம்', 'கௌரவம்' - இந்த கதை வசன இசைத்தட்டுகள் விற்பனையில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஒரு சிவாஜியின் சாதனையை அதே சிவாஜியால்தான் முறியடிக்க முடியும் என்பதை உதாரணத்துடன் நிரூபித்தன.
சிவாஜியின் சிம்ம சிருங்காரக் குரலை கேட்டால் குற்றாலத்தில் குளித்து எழுவது போலே அத்தனை சுகம், எத்தனை ஆனந்தம்!
இந்த ஆனந்தத்தில் தன்னிலை மறந்து ஆடியும் பாடியும் இன்புற்ற யாழ்ப்பாண ரசிகர்கள், ஓ அந்த கனவு காலங்கள்!
அப்பொழுதெல்லாம் யாழ் நகரில் திருவிழாவாகட்டும், திருமண விழாவாகட்டும் பெரிய லவுட்ஸ்பீக்கர்களில் ஒலிபரப்பி அதைக் கேட்டும் கேட்க வைத்தும் மக்கள் சொல்லொணா மகிழ்ச்சி கொள்வர். யாழ் நகரில் நடைபெறும் எந்தவொரு மங்களகரமான விழாக்களிலும் பின்வரும் படங்களில் எவையாவது இரண்டு படங்களின் வசனங்களாவது ஒலித்தே ஆக வேண்டும். இல்லையேல் அந்த ஒலி ஒளி அமைப்பாளர்கள் பாடு திண்டாட்டம் தான். அந்தப் படங்கள்: சவாலே சமாளி, திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், சரஸ்வதி சபதம், வசந்த மாளிகை, தங்கப்பதக்கம், மனோகரா.
சிவாஜி அவர்களின் சிம்மக் குரலில் சிருங்காரமாகச் சிதறும் இந்த வசன முத்துக்கள் ஒரு குறுகிய எல்லைப்பரப்புக்குள் மாத்திரம் தெறிக்கப்படக் கூடாது, அதன் படப்பு அடுத்த கிராமத்துக்கும் கேட்கும் அளவுக்கு விசாலாமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், ஓங்கி நெடிதுயர்ந்த பனையிலும் தென்னையிலும் நாற்றிசை நோக்கிய அசுர லவுட்ஸ்பீக்கர்களைக் கட்டி காதுகளை கௌரவித்து களிப்புறும் இலங்கையின் கலாரசிகர்கள்.
இந்த இமய நடிகரின் சிம்மக் குரலில் சிருங்காரங்களை, சிலிர்ப்புகளைக் காதுகளினால் மட்டும் கேட்டால் போதாது; அந்த குரல் தீபத்தைச் சுமந்து கொண்டிருந்த நடிப்புக் கோவிலின் புகழ்பரப்ப ஒரு பத்திரிகை வெளியிட வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அந்த ஆசையின் விளைவாக யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட சிவாஜி புகழ்பரப்பும் ஏடுதான் 'சிம்மக்குரல்'.
சிவாஜி அவர்களின் நடிப்புச் சாதனைகள், அவர் படங்களின் வசூல் விவரங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் அங்கே இறக்கிக்கொண்டு வந்து அங்கே நிறுத்தி இருந்தார்.
'ராஜா' திரையிடப்பட்டது யாழ் ராணி திரையரங்கில். ஒருவேளை ராஜாவுக்கு ராணி கொடுத்த ராஜ மரியாதையோ அது? இதைப்போல யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் 'பொன்னூஞ்சல்' படம். ஒரு பொன்மயமான ஊஞ்சலையே செய்து அதன் மேல் சிவாஜி - உஷா நந்தினி ஜோடியை உட்கார வைத்து வானமண்டலத்தில் கட்டியாள வைத்த அழகு. காற்றடிக்காத வேளையும் கலகலப்பாக ஆடிக் கொண்டிருந்த இந்த கட்-அவுட் ஊஞ்சலை இப்போது நினைத்தாலும் அந்த கடந்த நினைவுகளின் மணம் களி ஊஞ்சல் ஆடுகிறது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்துக்கு அண்மையில் மணியன் என்ற ஓவியர் இருக்கிறார். இவரது கைவண்ணத்தால் கட்-அவுட்டுக்கு உயிர் வந்து நம்மை கையசைத்துக் கூப்பிடும். அரங்க நுழைவாயிலின் முகப்பு மேலே கட்-அவுட்டுகளை வைத்துக்கொண்டு ஒரு மனோவசிய வித்தையையே நிகழ்த்திக் கொண்டிருக்கும் மணியன் ஓவியத் திறமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை இங்கே எழுத முடியும். மேற்படி நான் குறிப்பிட்ட அந்த கட்-அவுட் சாதனைகளுக்கெல்லாம் இலங்கையில் ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் அந்த ஓவியர் மணியனுக்கே கடமைப்பட்டவன்.
கௌரவத்துக்குக் கௌரவம் கொடுத்த இலங்கை ரசிகர்களா? இல்லை நடிப்புத் தெய்வத்துக்கு கௌரவமாக வாழ்ந்த கலைப் புதல்வன் சிவாஜி கணேசனா? சிவாஜி என்ற கலைச் சுடரின் உற்சவ உதய காலங்களில் இலங்கை ரசிக நெஞ்சங்களில் பதிந்து பரவசப்படுத்திய அந்த கிறக்கமான நடிப்புக் கிரணங்களை இப்பொழுதும் அசைபோட்டுப் பார்க்கிறேன். அந்த அசைவும் நினைவுகளே எனக்கு அடிக்கரும்பாக, வேம்பையும் வெல்லமாக்கும் அந்த இனிய நாட்கள் தித்திப்பு நாட்கள். ஒரு சிவாஜி ரசிகனாக என்னைப் பெருமைப்படுத்திய அந்தப் பொற்காலம். அந்தப் பழைய பக்கங்களின் நினைவுகளில் எனது பேனாவை நனைத்து எழுதியது இது.
(யாழ் சுதாகர், பொம்மை இதழில் வெளிவந்த கட்டுரை இது.)


