TamilsGuide

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு குவியும் பேராதரவு - போர் அச்சத்தை மீறி திரண்ட மக்கள்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நியமனத்திற்கு ஈரானின் அரசுத் துறைகள் மட்டுமன்றி, மக்களும் தங்களது பேராதரவை வெளிப்படுத்தி வருவதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்ட முதல் நிமிடத்திலிருந்தே, நாட்டின் அனைத்து முக்கிய துறைகளும் அவருக்கு தங்களது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன.

ஈரான் ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் புதிய தலைவருக்குத் தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஈரானின் காவல்துறை மற்றும் இராணுவம் ஆகியன மொஜ்தபா கமேனியின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்படப் போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று ஈரான் முழுவதும் புதிய தலைவருக்கு ஆதரவாக மக்கள் வீதிகளில் இறங்கித் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். தலைநகர் தெஹ்ரானில், குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு முழக்கமிட்டனர்.

இந்த மக்கள் எழுச்சியானது புதிய தலைவருக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. மொஜ்தபா கமேனியின் நியமனம் ஈரானின் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

. இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல்களை முன்னெடுக்கும் நாடுகளுக்குத் தமது ஒற்றுமையின் மூலம் ஒரு பலமான எச்சரிக்கையை விடுப்பதே ஆதரவுப் பேரணிகளின் நோக்கம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a comment

Comment