TamilsGuide

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு

நிந்தவூர் பிரதேச சபை கடந்த சுமார் மூன்று மாதங்களாக நிலைத்தன்மையற்ற நிலையில் இருந்த காரணத்தால், பொதுமக்கள் தங்களது பிரதேச சபையினூடாகப் பெறும் பல்வேறு சேவைகளைப் பெறுவதில் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் மெளலவி கே.எம். ஜலீல் அவர்களின் முயற்சியினாலும் ஒத்துழைப்பினாலும், நிந்தவூர் – 05, 06 மற்றும் 17 ஆம் பிரிவுகளில் ஒளிராமல் இருந்த 50க்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் மீண்டும் ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை நிந்தவூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடனும் மின்சார சபை ஊழியர்களின் உதவியுடனும், மேலும் உறுப்பினர் தனது சொந்த நிதியையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாதக்கணக்கில் செயலிழந்திருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட LED  மின்விளக்குகள் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தன்னை மற்றும் தனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் மெளலவி கே.எம். ஜலீல் குறிப்பிட்டார்.

மேலும், நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிதாக தெரிவான தவிசாளர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம் அவர்களின் தலைமையில், கட்சி வேறுபாடுகளைத் தாண்டி மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்குவதற்காக தானும் தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் தொடர்ந்து இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment