'திருவிளையாடல்' .. இயக்குனர் ஏ.பி. நாகராஜன் செதுக்கிய இந்தச் சிற்பத்தில், சிவபெருமானின் அறிமுகக் காட்சி என்பது வெறும் ஒரு நடிகரின் வருகை அல்ல; அது ஒரு தெய்வீக அனுபவம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் வருகை:
தெய்வீகக் காத்திருப்பு ....
திரைப்படம் தொடங்கும் போதே, பார்வையாளர்களை பூலோகத்திலிருந்து கைலாயத்திற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர். திரையில் முதலில் தெரிவது பனி சூழ்ந்த இமயமலையின் சிகரங்கள் அல்ல; மாறாக, பக்தியின் உச்சகட்ட அதிர்வுகள். பின்னணியில் இசை மேதை கே.வி. மகாதேவனின் இசை, ஒரு யாகசாலைக்குள் நுழைந்த உணர்வைத் தருகிறது. சங்கொலி, முழவு, தாளம் என அனைத்தும் இணைந்து ஒரு பிரம்மாண்டமான இசை முழக்கத்தை உருவாக்குகின்றன
திரை விரிகிறது... ஆனால் கண்கள் காண்பது ஒரு சாதாரணத் திரையை அல்ல; அது கயிலை மலையின் பனிப்படலக் கதவு. காதுகளில் விண்முகில் முட்டும் அளவிற்குப் பிரம்மாண்டமான நாத சங்கமம். மங்கல இசையின் பேரொலி, திசையெட்டும் அதிரும் சங்கநாதம், துந்துபி முழக்கங்கள் என விண்ணுலகமே ஒரு பெரும் வரவேற்பிற்குத் தயாராவதை அந்த இசை முழக்கம் பறைசாற்றுகிறது. அந்த இசையின் கனத்தினால், திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ரசிகனின் நாடி நரம்புகளிலும் ஒரு தெய்வீக அதிர்வு பரவுகிறது.
தேவர்களின் ஆராதனை - ஒரு விண்ணுலக அணிவகுப்பு...
இசை ஒருபுறம் ஆட்கொள்ள, திரையில் மெல்லத் தோன்றுகிறார்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள். நாரதரின் வீணை நாதமும், தும்புருவின் கானமும், ரம்பை, ஊர்வசி உள்ளிட்ட அரம்பையர்களின் நளினமான வழிபாட்டு நடனங்களும் ஒரு சேர நிகழ்கின்றன. தேவர்கள் கைகளில் மலர் ஏந்தி, சுடர் விளக்குகள் காட்டி, அந்தப் பரம்பொருளின் வருகைக்காகக் காத்து நிற்கிறார்கள். இது வெறும் வழிபாடு அல்ல; 'யார் அந்த ஆதிமூலம்?' என்ற ஏக்கத்தை பார்வையாளர்களின் மனதில் படிப்படியாக ஏற்றிச் செல்லும் ஒரு ஆன்மீகக் கலைப்படைப்பு.
ஜகன்மாதாவின் வேண்டுதல்...
அனைத்து ஆராதனைகளுக்கும்
மேலாக, அகிலாண்டேஸ்வரி அன்னை பார்வதி தேவி (நடிகையர் திலகம் சாவித்திரி) அங்கே தோன்றுகிறார். தன் நாயகனை, உலகிற்கு அருள வேண்டியும், தவம் கலைந்து தங்களுக்குத் தரிசனம் தர வேண்டியும் அவர் உருகி வேண்டும் போது, அது காதலும் பக்தியும் கலந்த ஒரு பேராற்றலாக மாறுகிறது. அன்னையின் விழிகளில் இருக்கும் அந்தப் பேரார்வம், "இறைவா! இதோ உம்மைப் போற்றும் உலகம் காத்திருக்கிறது, வாராய்!" என்று மௌனமாக அழைக்கிறது.
இமயம் அதிர... இதயம் குளிர... அந்த 'ஈசன்' அறிமுகம்!
நீண்ட நேரத் தவிப்பிற்குப் பிறகு, அந்தப் புகை மண்டலத் திரை மெல்லக் கலைகிறது. பேரொளி பிழம்புகளுக்கு நடுவே, ஒரு பிரம்மாண்டச் சிலையாக... அல்ல, நடமாடும் தெய்வமாக சிவாஜி கணேசன் அமர்ந்திருக்கிறார்.
நெற்றியில் தீயெனத் தகிக்கும் திருநீற்றுப் பட்டை, அதன் நடுவே ஞானத்தை உமிழும் மூன்றாவது கண். ஜடாமுடியில் குளிர்ந்த திங்களும், பெருக்கெடுத்து ஓடும் கங்கையும். கழுத்தில் புரளும் நாகாபரணங்கள் மூச்சுக் காற்றிற்கேற்ப அசைந்தாடுகின்றன.
அவர் கண்கள் மூடியிருக்கும் போது, அது பிரபஞ்சத்தின் மௌனம். அவர் மெல்லக் கண்ணைத் திறக்கும் போது, அது அகிலத்தின் விழிப்பு.
சிவாஜி அவர்களின் அந்தக் கம்பீரமான அமர்வு நிலை , ஒரு மகா யோகியின் அமைதியையும், உலகாளும் அவனின் அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கிறது. அவர் கைகளை உயர்த்தி 'அபயம்' அளிக்கும் போது, திரையரங்கமே ஒரு கோயிலாக மாறிப்போகிறது.
தமிழ் சினிமாவின் பிரமாண்டமான அறிமுகத்தின் பிதாமகன்....
இன்றைய காலக்கட்டத்தில் கதாநாயகர்களுக்குக் கொடுக்கப்படும் துப்பாக்கிச் சத்தங்களோ, கார் துரத்தல்களோ அந்த அறிமுகத்திற்கு ஈடாகாது. ஒரு புராணப் படத்தில், பத்து நிமிடங்கள் வெறும் 'பில்ட்-அப்' மூலமாகவே ஒரு கதாபாத்திரத்தின் பிம்பத்தை இமயமலை உயரத்தில் ஏற்றிவிட்டு, பின் அந்த உயரத்தில் துளியும் குறையாத ஒரு நடிப்பை சிவாஜி கணேசன் வெளிப்படுத்தியிருப்பார்.
அவர் பேசத் தொடங்கும் முன், அந்த மௌனத்திலேயே "நான் ஈசன் வந்திருக்கிறேன்" என்பதைத் தன் உடல் மொழியால் உணர்த்தியிருப்பார். தமிழ் திரையுலகின் வரலாற்றில், ஒரு நடிகரின் வருகைக்காக இவ்வளவு நீண்ட, நேர்த்தியான மற்றும் பிரம்மாண்டமான ஒரு அறிமுகப் படலம் வேறு எவருக்கும் அமைந்ததில்லை.
"மண்ணுலகில் மனிதனாகப் பிறந்து, திரையுலகில் தேவனாக வாழ்ந்து, கயிலாய நாதனையே தன் நடிப்பால் கண் முன்னே கொண்டு வந்த 'சிவாஜி' எனும் அந்த மகா கலைஞனுக்கு இந்தப் பிரபஞ்சமே தலைவணங்கும் காட்சி அது!"
செந்தில்வேல் சிவராஜ் ..


