TamilsGuide

ஜன நாயகன் படத்திற்கு நீடிக்கும் சிக்கல்- இன்று நடக்கவிருந்த மறுதணிக்கை ரத்து

விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் படம் மறுதணிக்கையாவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் வெளியாவது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை அடுத்து படக்குழு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு தடை விதித்ததோடு தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.

இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பார்க்க இருந்தனர்.

ஆனால் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பார்க்கவில்லை. இதை அடுத்து படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
 

Leave a comment

Comment