TamilsGuide

Middle East - 20,000 மாலுமிகள், 15,000 சுற்றுலா பயணிகள் கடலில் சிக்கித் தவிப்பு - ஐ.நா

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியான அந்நாட்டு ராணுவம் மத்திய கிழக்கில் மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள், தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கு பிரதான போக்குவரத்து பாதையாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

இதனால் வெளிநாட்டு சரக்கு கப்பல்கள், அதன் மாலுமிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 20,000 மாலுமிகள் மற்றும் 15,000 கப்பல் சுற்றுலா பயணிகள் வளைகுடா கடற்பரப்பில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO)தெரிவித்துள்ளது .

போர் தொடங்கிய கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 7 கப்பல் விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

"இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் நியாயப்படுத்த முடியாது" என்று IMO தலைவர் டோமிங்குவேஸ் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் முழு கட்டுபாட்டில் எடுத்துள்ளதால், அவ்வழியாக செல்லும் எண்ணெய் டாங்கர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 90% குறைந்துவிட்டது.

இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் டீசல், எரிவாயு விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

"தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பாக வரும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வணிகக் கப்பல்களுக்கு மலிவான விலையில் காப்பீடு வழங்கவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment