இந்தியாவின் வண்ணமயமான பண்டிகை ஹோலி. இந்து மதத்தின் மிகவும் உற்சாகமான பண்டிகைகளில் ஒன்றான ஹோலி, வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாடுகிறது. மார்ச் மாதத்தில், பௌர்ணமி நாளைத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இரண்டு நாட்கள் நீடிக்கும்- முதல் நாள் ஹோலிகா தஹன் (நெருப்பு ஏற்றுதல்) என்றும், இரண்டாவது நாள் ரங்க்வாலி ஹோலி (வண்ணங்கள் தெளித்தல்) என்றும் அழைக்கப்படுகிறது.
நன்மை, தீமையை வென்றதைக் குறிப்பதே ஹோலியின் முக்கியத்துவம் ஆகும். பிரஹலாதன்-ஹோலிகா கதை தான் இந்த பண்டிகையின் அடிப்படை. மக்கள் வண்ணத் தூள்களை (குலால்) ஒருவருக்கொருவர் தெளித்து, நடனமாடி, இனிப்புகளைப் பகிர்ந்து ஹோலியை கொண்டாடுகின்றனர்.
இது சமூக இணக்கத்தையும், பகைமையை மறந்து நட்பை வளர்க்கும் விழாவாகும்.ஹோலி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நேபாளம் மற்றும் இந்து சமூகங்கள் உள்ள நாடுகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறும். இது மகிழ்ச்சி, அன்பு மற்றும் புதிய தொடக்கங்களின் சின்னமாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாடும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும் மற்றும் தீமையை வென்றதில் மகிழ்ச்சியடையும் நாளான ஹோலி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் மெலனியாவும் நானும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று, உலகம் முழுவதும் சமூகங்கள் இந்த வண்ணங்களின் பண்டிகையைக் கொண்டாட ஒன்றுகூடும் நிலையில், ஹோலியைக் கொண்டாடும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் நம்பிக்கை, அமைதி மற்றும் ஒற்றுமை நிறைந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.


