TamilsGuide

ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல் - தீவிபத்தில் சிக்கிய சவுதி அமெரிக்க தூதரகம்

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

நான்காவது நாளாக நேற்றும் இந்தப் போர் உக்கிரமாக நடந்தது. இரவு முழுவதும் ஈரான்மீது இஸ்ரேல்-அமெரிக்க படைகள் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தின. குவைத்தில் அமெரிக்க தூதரம் மீது ஈரான் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், நேற்று சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறி உள்ளது.

அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை கண்டித்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஈரானின் ஏவுகணை பலத்தை முற்றிலும் அழிப்பது, இனி எப்போதும் அவர்களால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் செய்வது, அதற்கான உள்கட்டமைப்புகளை முழுவதுமாக அழிப்பதற்காக இந்த போர் நடக்கிறது. எங்கள் இலக்குகள் எட்டப்படும் வரை இப்போர் ஓயாது. இந்தப் போர் 4 அல்லது 5 வாரங்கள் வரை நீடிக்கலாம். அதற்கான ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கிறோம் என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment