பண்ருட்டி ராமச்சந்திரன் உருக்கம்
அண்மையில் எம்.ஜி.ஆர்-அண்ணா திமுக என்கிற பெயரில் தனிக்கட்சியைத் துவக்கியிருக்கிற பண்ருட்டி ராமச்சந்திரன், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் சமஸிடம் சொல்லியிருந்ததிலிருந்து சில பகுதிகள்.
* இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு இருந்தார் எம்.ஜி.ஆர்.
நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவர் ராஜீவ்காந்தியைப் பார்க்க டெல்லிக்குச் சென்றிருந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன்.
அப்போது உடல்நிலை ரொம்ப மோசமானதால் அவரால் சரியாகப் பேச முடியாமல், சோர்ந்து போயிருந்தார். ஆனால் அந்த நிலையிலும்,
“பிரபாகரனை ஒழித்துக்கட்ட காங்கிரஸ் முனைகிறது. அதைச் செய்ய வேண்டாம் என்று ராஜீவ்காந்தியிடம் நானும் சொன்னதாகச் சொல்லுங்கள்” என்று என்னிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். நானும் ராஜீவ்காந்தியிடம் சொன்னேன்.
* ஒரு சமயம் தமிழ்நாடு முதலமைச்சரக இருந்த எம்.ஜி.ஆருடன் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன்.
அப்போதும் மேடையில் பேசிய எம்.ஜி.ஆர் தமிழிலேயே பேசினார்.
எதிரே கூடியிருந்த மக்கள் “மலையாளத்தில் பேசுங்கள்” என்று சொன்னபோது எம்.ஜி.ஆர் சொன்னார், “என்னை வளர்த்தது தமிழ்நாடு தான். தமிழ்மொழி தான் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், நான் தமிழில்தான் பேசுவேன்” என்று சொல்லிவிட்டு, மேடையில் தொடர்ந்து தமிழில்தான் பேசினார்.
தமிழில் சங்க நூல்கள் வரை அவர் படித்திருக்கிறார். தமிழின் மீதிருந்த ஈடுபாட்டினால்தான் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தைத் கொண்டுவந்தார். உலகத் தமிழர் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்” என்று எம்.ஜி.ஆரைப் பற்றிய பல விஷயங்களைத் தொலைக்காட்சிப் பேட்டியின் வழியே பகிர்ந்து கொண்டார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
https://thaaii.com/.../panruti-ramachandran-telling.../


