மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போரில் கனடா இராணுவம் பங்கேற்காது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த மோதலில் கனடா இராணுவமாக ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
இந்த நடவடிக்கைகளுக்கான இராணுவ தயாரிப்பிலும் திட்டமிடலிலும் கனடா பங்கேற்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் இராணுவ ரீதியாக இணைவது எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை கனடா ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் இந்த கடுமையான சூழலில் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள கனடியர்கள் விழிப்புடன் இருந்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.


