TamilsGuide

நன்றி உணர்வு எப்போதும் என்னிடம் இருக்கும் -நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்.

“சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலையில் எம்.ஜி.ஆர். இல்லம் இருந்தது. நான் அவரை சந்தித்துப் பேச அடிக்கடி அங்கு போவது வழக்கம். அப்படி ஒரு நாள் அங்கு அவருடன் பேசக் கொண்டிருந்தபோது, ஜூப்பிட்டர் பிக்சர்ஸ் உரிமையாளர்கள் எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்தனர்.

வந்தவர்கள், ‘மோகினி’ படத்தில் நீங்கள் நடித்து உதவ வேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டனர்.

“உங்கள் நிறுவனப் படங்களில் நடிப்பது என் கடமை. நான் கதாநாயகனாக நடிக்க உங்கள் நிறுவனம் எனக்கு அளித்த முதல் வாய்ப்பை நான் மறந்து விடவில்லை. அந்த நன்றி உணர்வு எப்போதும் என்னிடம் இருக்கும். இதற்காகவா என் வீடு தேடி வந்தீர்கள். போனில் அழைத்து சொல்லி இருந்தாலே என் சம்மதத்தை தெரிவித்து இருப்பேனே” என்றார்.

எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று அவர்கள் தயங்கித் தயங்கிக் கேட்டதும், “உங்கள் விருப்பம் போல எவ்வளவு கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்வேன். மற்ற படப்பிடிப்புகள் இருந்தாலும் உங்கள் படத்துக்கு தேவையான கால்ஷீட் தருவேன்” என்றதும் அவர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.

அவர்கள் சென்றபின் நான் எம்.ஜி.ஆரிடம் மெதுவாகக் கேட்டேன். “ஏன் சார்… ஒரு காலத்தில் அவர்கள் படத் தயாரிப்பில் நடிக்க நீங்கள் பல நாட்களாக வாய்ப்புக் கேட்டு அலைந்துள்ளீர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களை அலையவிட்டவர்களை இப்போது அலையவிடாமல் உடனே சம்மதம் சொல்கிறீர்களே. உங்கள் மதிப்பு குறைந்துவிடாதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “தமிழ்ப் பட உலகில் கதாநாயகனாக நடிக்க எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர்கள் ஜூபிடர் முதலாளிகள். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அந்த நன்றியுணர்வு என்றும் மேலோங்கி இருக்கும். அங்கு பழிவாங்கும் உணச்சிக்கு இடமே இல்லை” என்றார்.

அவரது பெருந்தன்மையை கண்டு வியந்தேன்!”

-எம்.ஜி.ஆர். பற்றி மூத்த பத்திரிகையாளர் நவீனன்.

Leave a comment

Comment