கனடாவில் இதுவரை புலம்பெயர்தல் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களைப் பொருத்தவரை, தினமும் அவர்களைக் குறித்து ஏதாவது செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கும்.
குறைந்தபட்சம், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் குறித்து புலம்பெயர்ந்தோருக்கு பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஏதாவது அறிவிப்புகளையாவது வெளியிட்டுக்கொண்டிருப்பார்கள் அவர்கள்.
ஆனால், இப்போது கனடாவில் புலம்பெயர்தல் அமைச்சர் யார் என்பதே மற்ற நாடுகளில் உள்ள பலருக்குத் தெரியவில்லை.
ஆக, ’கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர் எங்கே?’ என்னும் செய்தி கவனம் ஈர்த்துவருகிறது.
இதற்கு முன் கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சராக இருந்தவர் Marc Miller. அவருக்கு முன், Sean Fraser கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சராக இருந்தார்.
கனடாவின் தற்போதைய புலம்பெயர்தல் துறை அமைச்சர் பெயர், லினா டியாப் (Lena Metlege Diab). லினா மீது தொடர்ந்து பல அமைப்புகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்துவருகின்றன.
குற்றச்சாட்டு? கனடாவின் தற்போதைய புலம்பெயர்தல் துறை அமைச்சரான லினாவை சந்திக்கவே முடியவில்லை என்பதுதான்!
தொண்டு நிறுவனங்களின் இயக்குநர்கள் பலர், லினா கனடாவின் தற்போதைய புலம்பெயர்தல் துறை அமைச்சராக பதவியேற்றதிலிருந்தே அவரை சந்திக்க முயன்றுவருவதாகவும், ஆனால், அவரை சந்திக்கவே முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.
TCRI என்னும் தொண்டு நிறுவனத்தின் தலைவரான ஸ்டீபன் (Stephan Reichhold) என்பவர், என் பதவிக்காலத்தில் 14 புலம்பெயர்தல் அமைச்சர்களைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் எப்போதும் பிஸியாகவே செயல்பட்டார்கள். ஆனால், தற்போதைய அமைச்சரான லினாவைப் பார்க்கவே முடியவில்லை, அவரைக் காணவேயில்லை என்கிறார்.
அதேபோல, ஐந்து அமைப்புகள் லினாவை சந்திக்க முயன்றதாகவும், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை என்றும், தாங்கள் வெறுப்படையும் நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிகின்றன.
லினா, ஊடகங்களில் கூட தோன்றுவதில்லையாம். கியூபெக்கில் புலம்பெயர்தல் தொடர்பில் பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், அது தொடர்பில் கூட லினாவை ஊடகங்களில் பார்க்கமுடியவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், Radio-Canada ஊடகம் லினாவை பேட்டி காண கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அதை லினா மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில், நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில், அகதி நிலை பரிசீலிப்பு காலகட்டம் குறித்து லினாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளிக்க அவர் திணறியதாக கூறப்படுகிறது.
புலம்பெயர்தல் அமைச்சகத்துக்கு, கனடா பிரதமர் மார்க் கார்னி, தவறான நபரை அமைச்சராக தேர்ந்தெடுத்துவிட்டார் என்கிறார்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இப்படி லினா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது, தொண்டு நிறுவனங்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டுமல்ல, அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே லினா மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


