TamilsGuide

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

சுமார் 22, 000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நெற்செய்கையின் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமடையும் அறுவடைப் பணிகள் கந்தளாய் குளத்தின் கீழ் நீர்ப்பாசனம் பெறும் முக்கிய பகுதிகளான:பரட்டைக்காடு, செட்டிக்காடு, வான் எல, வட்டுகச்சி, நாலாம் வாய்க்கால், தம்பலகாமம் ஆகிய இடங்களில் தற்போது அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யும் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை உரிய காலத்தில் நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட்ட போதிலும்,  தற்போது நிலவி வரும் இடைக்கிடையிலான மழை வீழ்ச்சி அறுவடைப் பணிகளுக்குச் சற்று சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும், மழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் விவசாயிகள் விரைவாக அறுவடை செய்து நெல்லைப் பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அறுவடைப் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், விவசாயிகள் அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்:

‘தற்போது சந்தையில் நிலவும் விலையினை விட, எமது கடின உழைப்பிற்கு ஏற்றவாறு நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’

சாதகமான விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், உரிய விலையும் கிடைத்தால் மட்டுமே இம்முறை விவசாயம் தமக்கு இலாபகரமாக அமையும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் ..

Leave a comment

Comment