மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக இன்று (28) கல்லடி பாலத்தில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்கா வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து கல்லடி பாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சிறிநாத், இரா.சாணக்கியன். க. கோடீஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், காணாமல் போன உறவுகள், உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.
இதனையடுத்து பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம், அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் வேண்டாம், இந்த நாட்டுக்குள் இருக்கும் குற்றவியல் சட்டம் போதும், பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் இழந்த உயிர்கள் போதாதா?, மக்களை ஒடுக்குகின்ற எந்த சட்டமும் வேண்டாம், சொந்த நாட்டு மக்களை பயங்கரவாதமாக பார்க்கும் சட்டம் எதற்கு, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷம் எழுப்பி அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பித்தது.
இவ்வாறு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அங்கிருந்து அரசடி வீதி சுற்று வட்டத்தையடைந்து அங்கிருந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வீதி சுற்று வட்டத்தையடைந்து காந்தி பூங்காவை சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் பகல் 11.30 மணி வரை ஈடுபட்ட பின்னர் அங்கு அறிக்கை பிரகணம் செய்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


