குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு
இலங்கை
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய தமிழ் மக்களிடமே கையளிக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கிராமமக்களால் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், காணி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எழுத்துமூலக் கோரிக்கை மற்றும் காணி ஆவணங்களின் பிரதியைப் பெற்றுக்கொண்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படுமெனவும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டாமென பொலிசாருக்கும் கடிதம் அனுப்பப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் சட்டவிரோதமாக பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளால் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு தீர்வுகாணுவது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலியே முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சட்டவிரோதமாக உப்பளம் அமைப்பதற்கு முயற்சித்த தரப்பினர் ஆகியோர் வருகைதரவில்லை.
இந்நிலையில் குறித்தகூட்டத்தில் குஞ்சுக்கால்வெளிப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு தாம் தமது இடங்களிலிருந்து இடம்பெயரும்வரையில் பயிற்செய்கையில் ஈடுபட்டுவந்த தமக்குரிய தனியார் அறுதி உறுதிக் காணிகள், 2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பிற்பாடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயத்திற்குரிய காணிகள் எனக் கூறப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனாலும் இதன்போது மாவட்டசெயலாளரிடம் முறையீடுசெய்யப்பட்டது.
இத்தகையசூழலில் குஞ்சுக்கால் வெளியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது அறுதி உறுதிக் காணிகளில் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள் திணைக்களம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களாலும் இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் முறையிடப்பட்டது.
எனவே குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமது பூர்வீக அறுதி உறுதி பயிர்ச்செய்கைக் காணிகளை தமக்கு மீட்டுத்தருமாறு இதன்போது மாவட்டசெயலாளரிடம் காணிக்குரிய மக்களால் தமது காணி ஆவணங்களுடன் கோரிக்கைக் கடிதங்களும் கையளிக்கப்பட்டன.
























