தமிழ்நாட்டை உலுக்கிய பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொ. வழக்கு. தேவையில்லாமல் மாட்டிய அந்த கால சூப்பர் நடிகர்கள்
சினிமா
87ல் இறந்த எங்க தாத்தா சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன் சுப்ரமணியசாமி உனை மறவேன் என நான் சின்ன வயசா இருக்கும்போது பாடிக்கொண்டே திரிவார் அப்போலாம் தெரியாது இது பாகவதர் பாடிய பாடல் என்று. 40 மற்றும் 50களில் தியாகராஜ பாகவதர்க்கென கணிசமான ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்தனர், இவர் அந்தக்கால சூப்பர் ஸ்டார், அதுவும் ஒரே அடியில் அறுபது பேரை வீழ்த்தி புகழ்பெற்றவர் அல்ல, படத்துல வந்து ஒரே ஒரு பாட்டு பாடினா போதும், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல ரசிகர்கள் மயங்கிவிடுவார்கள். அதனால் ஒரு படத்தில் ஓராயிரம் பாட்டு கூட வைப்பார்கள் என சொல்லும் அளவுக்கு எண்ணற்ற அன்லிமிட்டெட் பாடல்களை படத்தில் வைத்தார்கள்.இதனால் பாகவதர் பயங்கர செல்வாக்கு பெற்றிருந்தார், அவரின் ஹரிதாஸ், சிந்தாமணி, திருநீலகண்டர், அசோக்குமார் என எல்லா படங்களிலும் பாட்டு ஹிட்டு. தங்கத்தட்டில் சாப்பிட்டு வெள்ளி டம்ளரில் தண்ணீர் குடிப்பார் பாகவதர் என சொல்வதுண்டு, அவ்வளவு செல்வாக்கு இவருக்கு இருந்தது. இப்போது சமூக வலைதளத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட நடிகரை எதிர்மறையா விமர்சித்தால் அவர்கள் நம் ஏழு தலைமுறையை தோண்டி தான் கிழிப்பார்கள். அப்போ சமூக வலைதளம் இல்லாத காலம் என்றாலும் பா
கவதரை விமர்சித்தால் நம் எழுபது தலைமுறையை தோண்டி கிழிக்கும் அளவுக்கு அவரின் தற்கொ...**லை படை தளபதிகளாக உங்க பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா என்ற மனநிலையில் பல ரசிகர்கள் இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
இப்படிப்பட்ட புகழ்பெற்ற பாகவதரின் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி ஒட்டிக்கொண்டது. அதுதான் சென்னையின் புகழ்பெற்ற மஞ்சள் பத்திரிக்கையாளரான லட்சுமிகாந்தன் கொ.. வழக்கில் பாகவதரும் அப்போது புகழ்பெற்ற கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனும் மாட்டிக்கொண்டது. ஆனால் உண்மையில் இவர்கள் குற்றவாளிகளா என இன்றுவரை யாருக்கும் தெரியாது. கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்
இந்த லட்சுமிகாந்தன் சாதாரண ஆள் அல்ல பக்கா ஆபாசவாதி என கூட சொல்லலாம். அந்த காலத்திலேயே நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை கிழித்து தொங்க விட்டு செய்தி போட்டு தன் இந்து நேசன் பத்திரிக்கையின் சர்குலேசனை அதிகரிக்க செய்த ஆள். அந்தமானில் தண்டனை பெற்ற ஒரு தண்டனை கைதி. சென்னைக்கு வந்து சினிமாத்தூது என்ற பத்திரிக்கை ஆரம்பித்தார் அதில் நடிகர் நடிகைகள் பலரின் வண்டவாளங்களை தண்டாவாளங்களில் ஏற்றியதால் அனைவரும் அன்றைய பிரித்தானிய வெள்ளைக்கார அரசிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அந்த பத்திரிக்கையை தடை செய்தனர். அன்றைய இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் காகிதப்பற்றாக்குறை இருந்ததால் புதிதாக பத்திரிக்கை ஆரம்பிக்க தடை இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்து நேசன் என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி மிக கொடூரமாக மோசமாக நடிகர் நடிகைகளை மீண்டும் அச்சிலேற்ற முடியாத அளவிலான கிசு கிசுக்களை எல்லாம் எழுத தொடங்கினார் லட்சுமிகாந்தன்.
அப்போது புகழில் இருந்த ஒரு நடிகரையும் இவர் விட்டு வைக்கவில்லை, குறிப்பாக தியாகராஜ பாகவதர், மற்றும் என்.எஸ்.கே இருவரை பற்றி அதிக கிசு கிசு எழுதப்பட்டது.
8.11.1944ல் இவர் சைக்கிள் ரிக்சாவில் வந்துகொண்டிருந்தபோது இரு நபர்களால் குத்தப்பட்டார். ரத்தம் வழிந்தாலும் சில நம்ப முடியாத தமிழ் சினிமா ஹீரோக்கள் போல ரத்தம் வழிய வழிய தன் கைகளால் பொத்திக்கொண்டு தனது துணியை கிழித்து கட்டுப்போட்டுக்கொண்டும், தனது வக்கீல் நற்குணம் என்பவரை பார்க்க ஓடினார். அதற்கு ஒரு மாதம் முன்பே சிலரால் இவர் தாக்கப்பட்டார் அதனால்தான் வக்கீல் நற்குணம் என்பவரை இவர் பிடித்திருந்தார். வக்கீல் நற்குணத்தின் ஆலோசனைப்படி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரியில் சென்று அட்மிட் ஆனார், இவருக்கு அறுவை சிகிச்சை எல்லாம் செய்யப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக இவரின் கிட்னி, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் 9.11.1944ல் மறைந்தார்.
இந்த வழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கே மீது குற்றம் சாட்டப்பட்டாலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் இவை எல்லாம் அந்த நேரத்தில் அவர்களுக்கு எதிராகவே இருந்துள்ளது. இவர்கள் லட்சுமிகாந்தன் மீது கோபத்தில் இருந்தது உண்மை, ஆனால் இவர்கள்தான் செய்தார்களா என்பது யூகத்தின் அடிப்படையில் தான் இன்றுவரை சொல்லப்படுகிறது.
ஏனென்றால் லட்சுமிகாந்தன் ஊருக்குள்ள ஒரண்டை இழுக்காத ஆளே இல்ல என்கிறே ரேஞ்சுல மானாவாரியாக எல்லாரிடமும் ஒரண்டைய இழுத்தவர். ஒரு நடிகர் நடிகையை கூட விட்டதில்ல, ஆபாசமாக எழுதி தள்ளிக்கொண்டே இருந்தார். தன்வீட்டின் முன் போர்சனில் வாடகைக்கு இருந்த ஜானகி என்பவரையும் அவரின் சகோதரரையும் உறவுக்காரர்களையும் கூட கடுமையாக பகைத்துக்கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் மாதுரி தேவி என்ற அக்கால நடிகையையும் ஜெயானந்தன் என்பவரையும் இணைத்து எழுதியதால் அவர்கள் செய்த கொ.. இது எனவும் கூறப்படுகிறது இதற்கு திரைமறைவில் இருந்தவர் பாகவதர் மற்றும் என்.எஸ்.கே, ஸ்ரீராமுலு நாயுடுதான் என சொல்லப்படுகிறது. லட்சுமிகாந்தனுக்கு யார் எதிரான மனநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவான மனநிலையில் பாகவதர் , என்.எஸ் கிருஷ்ணன், சிவகவி என்ற பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இவர்கள்தான் செய்தார்களா என்பது நிரூபிக்க முடியாத உண்மையாக கடைசியில் போனது. காரணம் லட்சுமிகாந்தனின் செயல் அந்த மாதிரி ஏரியாவுக்குள்ள வம்பிழுக்காத ஆளே இல்ல என சொல்லலாம் அந்த அளவுக்கு பலரிடம் பல பஞ்சாயத்தில் லட்சுமிகாந்தன் இருந்தார்.
இப்போது போல நேராக இந்த கேசை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்போலாம் போயிட முடியாது, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் மேல் முறையீடு செய்ய வேண்டும், அப்படியாக இருவரும் மேல்முறையீடு செய்து இதை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் உத்தரவிட்டு அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் 1947ல் இவர்களுக்கு உரிய ஆயுள் தண்டனையை நீக்கி குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது.
இது மிக நீண்ட வழக்கு படித்து பார்த்தால் அவ்வளவு குற்றவாளிகள் லட்சுமிகாந்தன் பகைத்துக்கொண்ட அத்தனை நபர்கள் வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவர் மட்டும்தான் சம்பந்தப்பட்டதாக தெரியவில்லை. அந்த அளவுக்கு பல குழப்பங்கள் இந்த வழக்கில் இன்றுவரை இருந்துகொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் இன்றுவரை பல உண்மை குற்றவாளிகள் சிக்கவில்லை அவர்கள் எல்லாம் இந்த உலகத்திலேயே இப்போது இருக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Abiram Arunachalam























