பட்டையை கிளப்பும் தாய் கிழவி திரையரங்கில் வெற்றி பெறாவிட்டாலும் ஓடிடியில் மாசான ஹிட் பெறுவது உறுதி!!!!
சினிமா
பவுனுத்தாயாக ராதிகா சரத்குமார் வாழ்ந்திருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். தங்கத்தின் மதிப்பு, இந்திய பெண்கள் அதை பாரம்பரியமாக எப்படி கட்டிக்காப்பாற்றி வந்துக் கொண்டு தங்களது குடும்ப கஷ்டங்களை போக்கி வருகின்றனர்.கால மாற்றத்தின் காரணமாக உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்கள், பணத்தின் மீதும் சொத்தின் மீதும் மனிதர்களுக்கு ஏற்படும் பேராசை உள்ளிட்ட பல விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதை எந்தளவுக்கு நகைச்சுவை கலந்து போர் அடிக்காமல் சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமோ கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன்.
தாய் கிழவி படம் வெளியாவதற்கு முன்பே அவர் வெற்றிப் பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவர் இயக்கிய தாய் கிழவி படம் வெளியாவதற்கு முன்பே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் சேயோன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்று விட்டார்.
ராதிகா சரத்குமார் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு ஊரில் உள்ள கிழவியாக அச்சு பிசகாமல் நடித்துள்ள இந்த 'தாய் கிழவி' படத்தின் நிறைகள் என்ன குறைகள் என்ன? கதை என்ன? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
பவுனுத்தாய் (ராதிகா சரத்குமார்) படுத்த படுக்கையாக சாகும் நிலையில் இருக்கும் போது அவரை விட்டு பிரிந்துச் சென்ற மகன்கள் வந்து பார்க்கின்றனர். ஆனால், வீட்டுக்குள் வரக்கூட முடியாமல் அவர்கள் வெளியே உட்கார்ந்து இருக்க, இதற்கான காரணமாக பிளாஷ்பேக் விரிகிறது. பவுனுத்தாயின் கணவர் இறந்த பிறகு சொத்தை பிரித்துக் கேட்கும் மகன்களிடம் என் புருஷன் சொத்து கடைசி வரை நான் தான் ஆண்டு அனுபவிப்பேன் என சொல்லி விரட்டி விடுகிறார். அதனால், தனித்தனியாக சென்ற மகன்கள் தற்போது மீண்டும் அம்மாவை கவனித்தார்களா? மகன்கள் ஆசைப்பட்டதை போல சொத்து கிடைத்ததா? பவுனுத்தாயிக்கு என்ன ஆனது? என்பது தான் மீதிக் கதை.
பேஷன் ஸ்டூடியோவின் சுதன் சுந்தரம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள தாய் கிழவி படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குநர் என்றே தெரியாத அளவுக்கு படம் கிராமத்து மக்களை கண்டிப்பாக தியேட்டருக்கு வரவழைக்கும் வித்தையை செய்துள்ளார். கருத்துள்ள படமாக எடுக்க நினைத்தாலும் காமெடி கலந்து கொடுத்தால் மட்டுமே தியேட்டரில் ரசிகர்கள் போரடிக்காமல் படத்தை பார்ப்பார்கள் என்பதை இவரும் புரிந்து வைத்துள்ளார்.
மகன்களாக நடித்துள்ள அருள் தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் நடிப்பு மற்றும் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு தான் படத்தை கலகலப்பாக்குகிறது. ராதிகா தனது தேர்ந்த நடிப்பால் ஒரு பக்கம் சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் போதிய ரன்களை சேர்க்கின்றனர்.
படுத்த படுக்கையாக இருக்கும் அம்மாவை மீண்டும் மகன்கள் காப்பாற்ற போராட ஒரு விஷயம் காரணமாக அமைவதும் கடைசியில் கிளைமேக்ஸில் இடம்பெறும் ட்விஸ்ட்டும் அட்டகாசம்.
நடிகர்களின் நடிப்பைத் தாண்டி நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கமல்ஹாசன் ரசிகர்களுக்கான மெகா பிரியாணி விருந்து போல விருமாண்டி பட பாடல் முதல் ஏகப்பட்ட பாடல்களை கமல் ரசிகராக நடித்துள்ள சிங்கம்புலி வாயிலாக படத்தில் வைத்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் கமல் தயாரிப்பில் படம் பண்ணும் வாய்ப்பையும் தட்டித் தூக்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு மண் வாசனையும் கிராமத்து நய்யாண்டியையும் அழகுற காட்சிப்படுத்தியுள்ளது. எடிட்டர் சான் லோகேஷ் கத்தரி சரியாகவே வேலை செய்துள்ளது. இவர்களை தாண்டி மேக்கப் மேன் செல்லதுரை ஆலங்குடியின் கை வண்ணமும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
படத்தின் ட்ரீட்மெண்ட் புதுசா இருந்தாலும் கதை ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்டதை போலவே இருப்பது சிறிய மைனஸ் ஆக தெரிகிறது. சில இடங்களில் சில காமெடி காட்சிகள் இயல்பாக இல்லாமல் திணிக்கப்பட்டதை போலவே தெரிகிறது. ஆனாலும், பெண்கள் எப்படி கெத்தாக வாழ வேண்டும், மனித மனங்களை பணம் எப்படி மாற்றுகிறது, பாசம் எந்தளவுக்கு முக்கியம் போன்ற மெசேஜ்களை கடத்திய விதத்திற்காகவே இந்த தாய் கிழவியை கொண்டாடலாம். கிராமத்து ரசிகர்களையும் ஒருசேர தியேட்டருக்கு வரவழைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
Safi C
























